உயிருடன் விளையாடும் வியாபாரிகள்... வெள்ளரிக்காய்க்குப் பெயிண்ட் அடிக்கும் கொடூரம்... பகீர் வீடியோ!
பீகார் மாநிலம் கட்டிகார் ரயில் நிலையத்தில், வெள்ளரிக்காய்களுக்குச் செயற்கையான பச்சை நிறப் பெயிண்டைப் பூசி பயணிகளுக்கு விற்பனை செய்யும் அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரயில் நிலையத்தின் 7 மற்றும் 8-வது நடைமேடைகளில் அமர்ந்திருந்த பெண் வியாபாரிகள் சிலர், வெள்ளரிக்காய்கள் பசுமையாகத் தெரிவதற்காக அதன் மீது ஒரு ஆபத்தான ரசாயனப் பொருளைப் பூசுவது அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. லாபத்திற்காகப் பயணிகளின் உயிருடன் விளையாடும் இத்தகைய கொடூரச் செயல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
A lady got caught mixing dark chemical color on Cucumbers to look more fresh and juicy
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 8, 2026
That’s why people say never eat something in train from such vendors pic.twitter.com/vsSizXPSVO
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகள் உடனடியாக அதிரடி சோதனையில் இறங்கினர். ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பெயிண்ட் பூசப்பட்ட வெள்ளரிக்காய் கூடைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, வீடியோவில் இருந்த பெண் உட்பட மொத்தம் 9 பெண் வியாபாரிகள் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயன்படுத்திய ரசாயனம் என்ன என்பது குறித்தும், இதன் பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்த பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பயணிகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் இத்தகைய மோசடிச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே நிர்வாகம் அனைத்து நிலையங்களிலும் முறையான உணவுப் பாதுகாப்புச் சோதனைகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும், கலப்பட உணவுகளை விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
