33 ஆண்டு கால வழக்கில் 84 வயது முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை... !
பீகார் மாநிலத்தில் 33 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பதிவான ஒரு கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 84 வயதாகும் தீப் ராய் என்ற முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சரியாக நடக்கக் கூட முடியாமல் பிறரின் உதவியோடு தட்டுத்தடுமாறி அந்த முதியவர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வரும் காட்சிகள் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1992 ம் ஆண்டு நவம்பர் 10 ம் தேதி பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் இந்த மோதல் சம்பவம் நடந்தது. அதாலத் ராய் என்பவரது வீட்டின் அருகே உள்ள பாதையில் தீப் ராய் என்பவர் உடைந்த கண்ணாடி துண்டுகளைப் போட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்துக் கேள்வி எழுப்பியதால் அதாலத் ராய் மற்றும் அவரது மனைவியை ஒரு கும்பல் கடுமையாகத் தாக்கியது. இந்த சம்பவம் குறித்து 1993 ம் ஆண்டு மார்ச் 13 ம் தேதியன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே இதில் சம்பந்தப்பட்ட 4 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றம் தீப் ராயைக் குற்றவாளி என உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகு வாழும் காலத்தின் இறுதிக்கட்டத்தில் இந்த முதியவருக்கு கிடைத்துள்ள இந்த சிறை தண்டனை மக்கள் மத்தியில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
