நள்ளிரவில் பைக் வீலிங் ... தீப்பொறி பறக்கவிட்ட 6 மாணவர்கள் !
சென்னையில் அடையாறு, அண்ணா நகர், மெரினா மற்றும் வண்டலூர் வெளிவட்ட சாலை போன்ற பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பைக் ரேஸில் ஈடுபடுவது பெரும் தொடர்கதையாக உள்ளது. போலீசாரின் தீவிர வாகன சோதனை மற்றும் மேம்பாலங்களை மூடும் அதிரடி நடவடிக்கைகளால் சமீப காலமாக இது குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் சில இடங்களில் பைக் ரேஸ் மற்றும் சாகசங்கள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் மெரினா பீச்சில் இருந்து சாந்தோம் சாலை வழியாக அடையாறு மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் நோக்கிச் சென்ற வாலிபர்கள் சிலர் உயிரைப் பணயம் வைத்துப் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பை (பேரிகார்டு) கைகளால் இழுத்துக் கொண்டே சென்றுள்ளார். அந்த இரும்பு தடுப்பு தார்ச்சாலையில் உரசியபடி சென்றதால் பயங்கரத் தீப்பொறி ஏற்பட்டு, அந்த வழியே வந்த பிற வாகன ஓட்டிகளை உறைந்துபோகச் செய்துள்ளது.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், ஆபத்தான முறையில் பைக் சாகசம் மற்றும் வீலிங்கில் ஈடுபட்ட 5 பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் என மொத்தம் 6 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். வெறும் "ஜாலிக்காகவே" பேரிகார்டுகளை பைக்கில் இழுத்துச் சென்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், போலீசார் அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
