உரிமம் இன்றி சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்குச் சிறை தண்டனை !
தமிழ்நாட்டில் 18 வயது நிறைவடையாத சிறார்கள் கார், இருசக்கர வாகனங்கள் போன்ற மோட்டார் வாகனங்களை ஓட்டுவது சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும் எனத் தமிழ்நாடு காவல்துறை கடுமையான எச்சரிக்கை ஒன்ற விடுத்துள்ளது. அண்மைக்காலமாகப் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் பொதுச் சாலைகளில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்துகளை ஏற்படுத்துவது அதிகரித்து வருவதைத் தடுக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விதியை மீறிச் சிறார்கள் யாரேனும் பொது இடங்களில் வாகனங்களை ஓட்டிப் பிடிபட்டால், அந்த வாகனங்களின் உரிமையாளர்களான அவர்களது பெற்றோர்களுக்கு 25,000 ரூபாய் வரை அதிரடியாக அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமின்றி, விபரீதத்தை உணராமல் பிள்ளைகளுக்கு வாகனம் தந்து ஊக்குவிக்கும் பெற்றோர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கவும் சட்டத்தில் இடமுள்ளது எனப் போலீசார் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
இதனுடன் நில்லாமல், விதியை மீறும் சிறார்கள் ஓட்டி வந்த சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டத்தை மீறிய அந்தச் சிறார்களுக்கு 25 வயது நிறைவடையும் வரை எவ்விதமான புதிய ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படாது என்றும் தமிழ்நாடு காவல்துறை தனது அறிவிப்பில் எச்சரித்துள்ளது.
