ரஷ்ய பெண்களுடனான உறவை ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ்... மன்னிப்பு கோரினார்!
சமீபத்தில் அமெரிக்க நீதித்துறையினால் வெளியிடப்பட்ட 'எப்ஸ்டீன் கோப்புகள்' உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதில் பல முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், பில் கேட்ஸ் இந்த விவகாரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
எப்ஸ்டீன் கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ரஷ்யப் பெண்கள் இருவருடன் தனக்கு உறவு இருந்ததை பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டார். இருப்பினும், அந்தப் பெண்கள் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். எப்ஸ்டீனுடன் நேரத்தைச் செலவிட்டதும், தனது அறக்கட்டளை நிர்வாகிகளை அவருடன் சந்திக்க வைத்ததும் ஒரு மிகப்பெரிய தவறு என்று ஒப்புக்கொண்ட அவர், இதற்காகத் தனது நிறுவன ஊழியர்களிடம் மன்னிப்பு கோரினார்.

"நான் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை, அத்தகைய செயல்களைப் பார்த்ததும் இல்லை. எப்ஸ்டீனைச் சுற்றியிருந்த பாதிக்கப்பட்ட பெண்களுடன் நான் எந்த நேரத்தையும் செலவிடவில்லை" என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். எப்ஸ்டீனுடன் அவரது தனியார் விமானத்தில் சில நாடுகளுக்குப் பயணித்ததை ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ், ஆனால் எப்ஸ்டீனின் சர்ச்சைக்கும் உரிய 'தீவுக்கு' தான் ஒருபோதும் சென்றதில்லை என்று விளக்கம் அளித்தார்.

2014-ம் ஆண்டு வரை எப்ஸ்டீனுடன் பலமுறை சந்திப்புகளை நடத்திய பில் கேட்ஸ், முகம் மறைக்கப்பட்ட சில பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. இது அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்ததால், தற்போது தனது அறக்கட்டளையின் (Gates Foundation) டவுன் ஹால் கூட்டத்தில் இந்தப் பொறுப்பேற்பை அவர் செய்துள்ளார்.
தனது அறக்கட்டளையின் விழுமியங்களுக்கு மாறாகத் தான் நடந்து கொண்டதை ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ், இனி வரும் காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாது என்றும் உறுதியளித்துள்ளார்.
