நாளை முதல் தலைமைச் செயலக சு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமல்!

 
பயோமெட்ரிக் பயோமெட்ரிக்

தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழியர்களின் வருகை மற்றும் பணி நேரத்தை முறைப்படுத்துவதற்காகப் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை முதல் பயோமெட்ரிக் எனப்படும் விரல் ரேகை அல்லது முக அங்கீகார அடிப்படையிலான வருகைப்பதிவு முறை கட்டாயமாக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக மனிதவள மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் வந்து வேலை செய்து வருகிறார்கள். ஊழியர்கள் பலர் காலை 10 மணிக்குத் தொடங்கக் கூடிய தங்களின் பணி நேரத்திற்குத் தாமதமாக வருவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனைத் தடுத்து நிறுத்தி நிர்வாக ஒழுங்கையும், பணியாளர்களின் துல்லியமான வருகையையும் உறுதி செய்வதற்காகவே இந்த புதிய நடைமுறையைத் தற்போது அரசு கொண்டு வந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த முறை கொண்டு வரப்பட்டபோது ஊழியர் சங்கங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அது தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டது. ஆனால் தற்போது மனிதவள மேலாண்மைத் துறையில் முழுமையாக அமல்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக மற்ற அனைத்து அரசுத் துறைகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின் மூலம் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் பணி நேரத்தை எவ்விதத் தொய்வும் இன்றி முறையாகப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.