வண்டலூர் பூங்காவில் பறவை காய்ச்சல் உறுதி... இன்றும், நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு!

 
வண்டலூர் பூங்கா

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 2 நாட்களுக்குப் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவரும் நீர்வாழ் பறவைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில், பறவைகளுக்கு 'H5N1' வைரஸ் தொற்று இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

வண்டலூர்

தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், பறவைகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாகக் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுத் தூய்மைப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், பூங்கா வளாகத்தில் கடுமையான உயிர் பாதுகாப்பு நடைமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

வண்டலூர்

இதன் காரணமாக, பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, தற்காலிகமாக 2 நாட்களுக்குப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.