ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது பறவை மோதல்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 164 பயணிகள்!
டெல்லியில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவிற்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது அதன் மீது பறவை மோதிய நிலையில், விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து 164 பயணிகளுடன் பீகார் தலைநகர் பாட்னாவிற்கு ஏர் இந்தியாவின் AI 1741 விமானம் புறப்பட்டுச் சென்றது. நேற்று காலை 7:44 மணியளவில் பாட்னா விமான நிலையத்தில் தரையிறங்கும் வேளையில், எதிர்பாராதவிதமாக விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியது. பறவை மோதியபோதிலும் விமானி திறம்படச் செயல்பட்டு விமானத்தைப் பாட்னா விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.

விமானம் தரையிறங்கியதும் அதிகாரிகள் உடனடியாக ஓடுதளத்திலும் விமானத்திலும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தின் பிற சேவைகளுக்கோ அல்லது செயல்பாடுகளுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், விமானத்திலிருந்த 164 பயணிகளும் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
