தொகுதி வாரியாக களமிறங்கும் பாஜக… சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை வெளியீடு!

இந்நிலையில், தமிழக பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தொடர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பொறுப்பாளருக்கும் குறைந்தது இரண்டு முதல் அதிகபட்சமாக ஏழு தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் அடிப்படை அமைப்புகளை வலுப்படுத்த இந்த சுற்றுப்பயணம் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். தொகுதி வாரியாக மக்களை சந்தித்து மத்திய அரசு திட்டங்களை எடுத்துச் சொல்லவும், கட்சியின் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வரும் தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பூத் மட்டத்தில் கட்சியை பலப்படுத்துவதே முக்கிய இலக்கு என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு நெருங்கி வரும் நிலையில், பாஜகவின் இந்த நடவடிக்கை அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம் ஆகிய 5 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
வானசி சீனிவாசனுக்கு திருப்பூர் தெற்கு, குன்னூர், கோயம்புத்தூர் தெற்கு தொகுதிகளும், தமிழிசை சௌந்திரராஜனுக்கு கும்மிடிபூண்டி, மயிலாப்பூர், நாங்குநேரி, பொள்ளாச்சி, கிளியூர் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. எச்.ராஜாவுக்கு முதுகுளத்தூர், விளவன்கோடு, திருப்பதூர், சிவகங்கை, உடுமலைப்பேட்டை தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. வி.பி.துரைசாமிக்கு எழும்பூர், ராசிபுரம், பரமத்திவேலூர் தொகுதிகளும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளம், பழனி தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது இரண்டு முறை முழுமையான சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு முறையும் 24 மணி நேரம் தங்கி பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமுதாய தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பூத் பொறுப்பாளர்கள், சக்தி கேந்திர உறுப்பினர்களை நேரில் சந்தித்து தேர்தல் வெற்றிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து, தொகுதி வெற்றியே ஒரே இலக்காக செயல்பட வேண்டும் என்றும் பாஜக தலைமையகம் அறிவித்துள்ளது.
