5 மாநில தேர்தல் செலவு ரூ.529 கோடி... பா.ஜ.க. அதிகம் செலவிட்டது எங்கே? வெளியான முக்கிய விவரம்

 
பிஜேபி

 

2026-ம் ஆண்டு நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. ரூ.529.38 கோடி செலவிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி தாக்கல் செய்துள்ள தேர்தல் செலவின அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேற்கு வங்காளத்தில் மட்டும் ரூ.286.99 கோடி செலவிடப்பட்டுள்ளது.அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 சட்டசபை தேர்தல்களுக்கான செலவினங்களை பா.ஜ.க. மத்திய தலைமை அலுவலகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த மொத்த செலவில் மேற்கு வங்காளத்துக்கான செலவு மட்டும் சுமார் 54 சதவீதமாகும்.

மேற்கு வங்காளத்தில் கட்சியின் பொதுப் பிரசாரத்துக்காக ரூ.217.16 கோடியும், வேட்பாளர்கள் தொடர்பான செலவுகளுக்காக ரூ.69.83 கோடியும் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட தொகையாக மட்டும் ரூ.58.80 கோடி இடம்பெற்றுள்ளது.

மற்ற மாநிலங்களில் அசாமில் ரூ.96.26 கோடியும், கேரளாவில் ரூ.82.67 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.51.56 கோடியும், புதுச்சேரியில் ரூ.11.89 கோடியும் பா.ஜ.க. செலவிட்டுள்ளதாக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.மேலும், தேர்தல் காலகட்டத்தில் பா.ஜ.க.வுக்கு ரூ.1,494 கோடி வருவாய் கிடைத்ததாகவும், தேர்தல் காலம் முடிவில் வங்கி இருப்பு மற்றும் கையிருப்பு பணமாக ரூ.7,689.06 கோடி இருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BJP Spent Rs 529 Crore On 5 State Polls, Over Half In Bengal, EC Expenditure Report Shows | India News - News18

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுக்கு சட்டப்படி உச்சவரம்பு உள்ளது. அதேநேரத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுக்கு வேட்பாளர்களைப் போல ஒரே மாதிரியான உச்சவரம்பு இல்லை. தேர்தலுக்குப் பிறகு பயணம், பேரணிகள், விளம்பரங்கள், பிரசாரப் பொருட்கள் உள்ளிட்ட செலவுகளின் விவரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.