"காரில் வைத்து பாலியல் வல்லுறவு முயற்சி" - பாஜக கரு.நாகராஜன் மீது மகளிரணி தலைவர் குற்றச்சாட்டு - பிரதமர் மோடிக்கு கடிதம்!

 
கரு நாகராஜன் கரு நாகராஜன்

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக இருப்பவர் கரு.நாகராஜன். இவர் மீது சென்னை மாவட்ட மகளிரணி தலைவரான தங்க சோபனா, பாலியல் புகார்களைச் சுமத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தங்க சோபனா தனது கடிதத்தில் 2018-ம் ஆண்டு முதல் தனக்கு நேர்ந்த சித்திரவதைகளை வரிசைப்படுத்தி எழுதியுள்ளார்.  கட்சி அலுவலகமான கமலாலயத்தில் தன்னைத் தனியாக அழைத்த கரு.நாகராஜன், கையைப் பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றதாகவும், தான் அவரை அறைந்துவிட்டு வெளியே வந்ததாகவும் சோபனா குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் 2022ல் கட்சி வேலை என்று கூறி ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்து, காரின் உள்ளே அமர வைத்து தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். "எனக்கு இணக்கமாக இருந்தால் உன்னை மகாராணி போல் வைத்திருப்பேன்" என்று கூறி பலாத்கார முயற்சி நடந்ததாக அவர் விவரித்துள்ளார்.

கரு நாகராஜன்

தனது பாலியல் இச்சைக்கு இணங்கவில்லை என்றால், அரசியல் வாழ்க்கையையே முடித்து விடுவேன் என்றும், கட்சியை விட்டு நீக்கி விடுவேன் என்றும் கரு.நாகராஜன் மிரட்டியதாக சோபனா தெரிவித்துள்ளார்.

தங்க சோபனா தனது கடிதத்தில் மற்றுமொரு அதிர்ச்சித் தகவலையும் பகிர்ந்துள்ளார். இந்தச் சம்பவங்கள் குறித்து முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோரிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தனது ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளார். மாறாக, "உன்னால் ஒன்றும் செய்ய முடியாது, மேலிடத்தில் உள்ளவர்களுக்கு நான் பல உதவிகளைச் செய்திருக்கிறேன்" என கரு.நாகராஜன் தன்னைத் திமிருடன் ஏளனம் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அண்ணாமலை

பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறும் பாஜகவின் முக்கியப் புள்ளியே இத்தகைய புகாரில் சிக்கியுள்ளது எதிர்க்கட்சிகளிடையே விவாதப் பொருளாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி நேரடியாகப் பிரதமருக்கே கடிதம் எழுதியுள்ளது இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது. இந்தக் கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து கரு.நாகராஜன் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் வரவில்லை. காவல்துறை விசாரணை அல்லது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்குப் பிறகே உண்மை நிலவரம் முழுமையாகத் தெரியவரும்.