நடிகர் ரஜினிகாந்தை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

 
ரஜினி நயினார் நாகேந்திரன் ரஜினி நயினார் நாகேந்திரன்

இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்தில் நேரில் சென்று சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, நயினார் நாகேந்திரனுடன் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளரும், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான அரவிந்த் மேனன், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் மாநிலப் பிரசாரப் பிரிவு அமைப்பாளர் பாண்டியராஜ் ஆகிய முக்கியத் தலைவர்களும் உடன் சென்றிருந்தனர்.

ரஜினி நயினார் நாகேந்திரன்

மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 12 ஆண்டுகால மக்கள் நல ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தை விவரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புப் புத்தகங்களை ரஜினிகாந்துக்கு நயினார் நாகேந்திரன் வழங்கி மகிழ்ந்தார்.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள சூழலில், தற்போதைய நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகப் பரவலாகக் பேசப்படுகிறது. எனினும், இச்சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று சென்னை போயஸ் தோட்டத்தில், தாதாசாகேப் பால்கே விருது பெற்ற இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார், பத்மபூஷன் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தோம். அப்போது, பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 12 ஆண்டுகால சாதனை மற்றும் வளர்ச்சி திட்டங்களை எடுத்துரைக்கும் வகையிலான சிறப்பு நூல்களை அவருக்கு வழங்கி மகிழ்ந்தோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.