தேர்தலில் பெண் பிரபலஙளைக் களமிறக்கும் பாஜக... கேரளாவில் 'பெண் சக்தி' வியூகம்!
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள கேரள சட்டமன்றத் தேர்தலில், பாஜக பெண் பிரபலங்களையும், முக்கியப் பிரமுகர்களையும் களமிறக்கி தனது செல்வாக்கை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. கேரளாவில் இடதுசாரி (LDF) மற்றும் காங்கிரஸ் (UDF) கூட்டணிகளுக்குப் போட்டியாக, பாஜக இந்த முறை நட்சத்திர வேட்பாளர்களைக் கொண்டு களம் காணத் தயாராகி வருகிறது.
கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், ஓய்வுபெற்ற டிஜிபியுமான ஆர். ஸ்ரீலேகா, திருவனந்தபுரத்தின் வட்டியூர்காவு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சாஸ்தமங்கலம் வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் மாநிலத் துணைத் தலைவரான சோபா சுரேந்திரன், பாலக்காடு தொகுதியில் போட்டியிட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே பல்வேறு தேர்தல்களில் பாஜகவின் வாக்கு வங்கியைப் பலப்படுத்தியவர். பிரபல நடிகையும், மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' அமைப்பின் தலைவருமான ஸ்வேதா மேனன், திரிபுனித்துரா தொகுதியில் பாஜக சார்பில் களம் காண வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சினிமா மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களை வேட்பாளர்களாக நிறுத்துவதன் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளைக் கவர பாஜக திட்டமிட்டுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலில் பாஜக பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என அக்கட்சி நம்புகிறது. பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் நெமம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆட்சியில் உள்ள இடதுசாரி முன்னணியைத் தோற்கடிக்க, பாஜக தனது வேட்பாளர் தேர்வில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, படித்த மற்றும் சமூகத்தில் செல்வாக்கு மிக்கப் பெண் முகங்களை முன்னிறுத்துவது அக்கட்சியின் முக்கியத் திட்டமாக உள்ளது.
