ரூ.6,769 கோடி நன்கொடை பெற்ற பாஜக - தேசியக் கட்சிகளில் பாஜக முதலிடம்!
ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ள 2024-25 நிதியாண்டிற்கான அறிக்கையில், இந்தியாவின் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் விரிவாக அலசப்பட்டுள்ளன. இதில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), மற்ற அனைத்து தேசியக் கட்சிகளையும் விட நிதி வலிமையில் பல மடங்கு முன்னிலையில் உள்ளது.
அந்த அறிக்கையில், 2024-25 நிதியாண்டில் பாஜக ரூ.6,769 கோடி வருமானத்தைப் பெற்றுள்ளது. இது இந்தியாவின் 6 தேசியக் கட்சிகளின் மொத்த வருமானத்தில் 85 சதவீதமாகும். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதே காலத்தில் ரூ.918 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது பாஜகவின் வருமானத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 13.5 சதவீதம் மட்டுமே.

பாஜக தனது வருமானத்தில் ரூ.3,774 கோடியைத் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சி நிர்வாகத்திற்காகச் செலவிட்டுள்ளது. மறுபுறம், காங்கிரஸ் தனது வருவாயான ரூ.918 கோடியைத் தாண்டி, கூடுதலாக ரூ.1,111.94 கோடியைச் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பத்திரங்கள் நடைமுறை ரத்து செய்யப்பட்ட பிறகு, நேரடி நன்கொடைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்புகள் மூலமாகவே இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.
