பெண்களுக்கு ₹2,000, விவசாயிகளுக்கு ₹3,000... ‘ புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி' ... பாஜக அதிரடி தேர்தல் அறிக்கை!

 
நயினார் நயினார்

 

தமிழ் புத்தாண்டு நன்னாளில்  தமிழக பாஜக தனது 2026 சட்டமன்ற தேர்தலுக்கான "புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி" அறிக்கையை வெளியிட்டுள்ளது. "சங்க கால வேர்களில் இருந்து செழிப்பான எதிர்காலத்தை நோக்கி" என்ற முழக்கத்துடன் வெளியாகியுள்ள இந்த அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,000 ஊக்கத்தொகை மற்றும் ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் எனப் பிரம்மாண்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. பெண்களுக்கு ₹50 லட்சம் வரை வட்டி இல்லா கடன் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ₹25,000 மானியம் எனப் பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டுள்ளன.

பெண்கள் மகளிர் செல்போன்

இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு 1 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள், கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு AI, ரோபாட்டிக்ஸ் பயிற்சி அளிக்கப்படும் என பாஜக உறுதி அளித்துள்ளது. விவசாயிகளுக்கு PM-KISAN திட்டத்தின் கீழ் கூடுதலாக ₹3,000 நிதி மற்றும் மீனவர்களுக்குத் தடைக்கால நிவாரணமாக ₹12,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை - பெங்களூரு - ஹைதராபாத் இடையே அதிவேக ரயில்கள் மற்றும் தமிழகத்தை இந்தியாவின் "கடல்நீர் சுத்திகரிப்பு தலைநகராக" மாற்றும் திட்டங்களும் அறிக்கையில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

விவசாயி

ஆன்மீக மற்றும் கலாச்சார ரீதியாகவும் அதிரடி காட்டியுள்ள பாஜக, தைப்பூசத்தை மாநிலத் திருவிழாவாக அறிவிக்கவும், கோயில்களின் நித்ய பூஜைகளுக்காகத் தனித் தொகுப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளது. குறிப்பாகப் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கத் தனித் துறை மற்றும் நுண்ணறிவுப் பிரிவு உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க 'இரட்டை எஞ்சின்' அரசாங்கம் அவசியம் என வலியுறுத்தியுள்ள பாஜக, இந்தத் தாமரை வாக்குறுதிகள் அனைத்தும் மோடியின் கியாரண்டி என முழங்கியுள்ளது. இது தேர்தல் களத்தில் மற்ற கட்சிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.