பயங்கரம்: லாரி மீது மோதிய பாஜக எம்.பி. கார்.. நூலிழையில் உயிர் தப்பிய ஹேமந்த் சவ்ரா!
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமந்த் சவ்ரா இன்று மே 1 அதிகாலை தானே மாவட்டத்தில் இருந்து குஜராத் நோக்கித் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது ஹேமந்த் சவ்ராவின் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்தத் திடீர் விபத்தினால் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தக் கோர விபத்தில் காரைச் செலுத்தி வந்த ஓட்டுநருக்குப் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்வாய்ப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமந்த் சவ்ரா எவ்வித காயமுமின்றி இந்த விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார். விபத்து நடந்த நேரத்தில் காரில் இருந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர் செய்தனர். லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மே தின அதிகாலையில் நடந்த இந்த விபத்துச் செய்தி மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
