பாஜக மேற்கு வங்காளத்தில் புதிய வரலாறு... மே 9ல் பதவியேற்பு!
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, முதன்முறையாக அந்த மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் (தேர்தல் ரத்து செய்யப்பட்ட ஒரு தொகுதியைத் தவிர), பாஜக 207 இடங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மையுடன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த 2011 முதல் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களை மட்டுமே பெற்றுத் தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் புதிய பாஜக அரசு வரும் மே 9 ஆம் தேதியன்று பதவியேற்க உள்ளது. தற்செயலாக அன்று புகழ்பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.
அதேவேளையில், தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்துள்ள மம்தா பானர்ஜி, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக முறைகேடு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தான் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றும், ஆளுநர் மாளிகைக்குச் செல்ல மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளது மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பாஜக புதிய அரசு அமைப்பதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதால், அம்மாநிலத்தில் ஒரு புதிய அரசியல் அத்தியாயம் தொடங்க உள்ளது.
