கருங்கடலில் சரக்குக் கப்பலில் பயங்கர தீ விபத்து: ஒருவர் பலி; 3 மாலுமிகள் மாயம்!

 
கருங்கடல்

 

கருங்கடலில் ருமேனியா கடற்கரை அருகே சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 3 மாலுமிகளைக் காணவில்லை. கப்பலில் இருந்த மற்ற 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மாயமானவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

13 மாலுமிகளுடன் சென்ற கப்பலில் தீ விபத்து

ருமேனியாவின் கான்ஸ்டான்டா (Constanța) துறைமுக நகரத்திலிருந்து சுமார் 13 கடல் மைல் தொலைவில் இன்று காலை 10 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரிவ் (Khoryv) என அடையாளம் காணப்பட்ட சரக்குக் கப்பலில் மொத்தம் 13 மாலுமிகள் இருந்தனர். அவர்களில் 10 பேர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள்; 3 பேர் அசர்பைஜான் நாட்டினர்.

கப்பலில் திடீரென தீப்பற்றியதைத் தொடர்ந்து அது கடுமையாகச் சேதமடைந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ருமேனிய அதிகாரிகள் மீட்புப் பணிகளைத் தொடங்கினர். அருகில் இருந்த மற்றொரு வணிகக் கப்பலின் உதவியுடன் 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஒருவரின் உடலும் மீட்கப்பட்டது.

Romania Says Rescue Mission Underway after Black Sea Ship Fire; 1 Dead, 3 Missing

மாயமான 3 பேரைத் தேடும் பணி தீவிரம்

இந்த விபத்தில் மேலும் 3 மாலுமிகள் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் நிலவிய மோசமான வானிலை மற்றும் குறைந்த பார்வைத்திறன் காரணமாக ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்பலில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கப்பல் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாக சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தாலும், இதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ரஷியா-உக்ரைன் போரின் பின்னணியில் கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் மேலும் கவனத்தைப் பெற்றுள்ளது.