கருங்கடலில் தீவிரமடையும் போர்... உக்ரைன் அருகே 13 இந்திய மாலுமிகள் தவிப்பு !
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் கருங்கடல் பகுதியில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அப்பகுதியில் தொடர்ச்சியாக ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றன. வணிகக் கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில் பலாவ் நாட்டுக் கொடியுடன் இயங்கும் 'எம்.வி. அமிர்-1' சரக்குக் கப்பல் அங்கே நிறுத்தப்பட்டுள்ளது. உக்ரைனின் செர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த சரக்குக் கப்பலில் மொத்தம் 15 பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் 13 பேர் இந்திய மாலுமிகள் என்பது குறிப்பிடத்தக்கதுடன், அவர்களின் உயிருக்கு ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.

துறைமுகத்தைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் இடைவிடாது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கப்பலை எந்தப் பக்கமும் பாதுகாப்பாக நகர்த்தி வெளியே கொண்டு வர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. கப்பலில் இருக்கும் இந்திய மாலுமிகள் எந்த நேரத்திலும் தங்களது கப்பல் மீது தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்திய மாலுமிகள் சங்கம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கப்பலைச் சுற்றி அடர்ந்த புகை மண்டலம் சூழ்ந்துள்ளது தெளிவாகப் பதிவாகியுள்ளது. த்துறைமுகப் பகுதியில் வெடிப்புச் சத்தங்கள் ஓயாமல் கேட்கும் காட்சிகள் உலக அளவில் பெரும் பதைபதைப்பை உருவாக்கியுள்ளன.
போர்ப் பகுதியில் சிக்கித் தவிக்கும் 13 இந்திய மாலுமிகளையும் உடனடி மீட்பு நடவடிக்கைகள் மூலம் மீட்கக் கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய மாலுமிகள் சங்கம், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையை உடனடியாகத் தலையிட வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் அதிகாரிகளுடன் இணைந்து இந்தியர்களைப் பத்திரமாகத் தாய்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
