தலையில் ரத்தகசிவு... உடல் முழுக்க காயங்களுடன் தூங்கச் சென்ற அமுதன்... மருத்துவ அறிக்கையில் அடுத்தடுத்து அதிர்ச்சி!
கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் (19) கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மரணத்திற்கான காரணத்தைக் கூறும் பிரேதப் பரிசோதனை மற்றும் மருத்துவ அறிக்கை வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்த மாணவர் இளவரசன் மற்றும் அவரது நண்பர்களைத் தாக்கிச் செல்போனைப் பறித்த சம்பவத்தில் அமுதனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி மோதல் உருவாகியுள்ளது. இதன்பின்னர், ஆகஸ்ட் 10-ம் தேதி காலை மலுமிச்சம்பட்டி அருகே அமுதன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீமன் ஆகிய இருவரையும் வழிமறித்த சீனியர் மாணவர்கள் அடங்கிய கும்பல், அவர்களைத் தனியார் கல்லூரி மைதானத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளது. தாக்குதலுக்குள்ளான அமுதன் காலை 10 மணியளவில் தனது அறைக்குத் திரும்பி ஓய்வெடுத்துள்ளார்.

அமுதனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், தாக்குதலின் போது அவரது தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உட்புற ரத்தக்கசிவு ஏற்பட்டதே உயிரிழப்பிற்கு முதன்மையான காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பலத்த காயங்களுடன் அறைக்குத் திரும்பித் தூங்கச் சென்ற அமுதனுக்கு, பிற்பகல் 3 மணியளவில் தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாகத் தீவிர மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

மூச்சுத்திணறல் ஏற்பட்டவுடனே அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகச் செட்டிபாளையம் காவல்துறையினர் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து, கொலையில் தொடர்புடைய நபர்கள் மீது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
