நுரையீரலில் ரத்தக்கசிவு, மூளை,இதயத்தில் வீக்கம்... பாலகிருஷ்ணன் லாக்-அப் மரணத்தில் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்கள்!

 
மதுரை செக்கானூரணி காவல் நிலையம் லாக்-அப் டெத்

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் இதனை 'காவல் நிலைய மரணம்' என அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள டி.அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் (42), ஏலக்காய் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி தீ விபத்துக்குள்ளானது தொடர்பான விசாரணைக்காகச் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை செக்கானூரணி காவல் நிலையம்

காப்பீட்டுத் தொகை பெறுவதற்காகக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லிப் பாலகிருஷ்ணனைப் போலீசார் துன்புறுத்தியதாகவும், அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவரது மனைவி குற்றம் சாட்டினார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாகச் செக்கானூரணி காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல்ராஜன் மற்றும் கலைச்செல்வி ஆகிய மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கைக் கையிலெடுத்து விசாரணை நடத்தி வருவதுடன், மேற்கண்ட மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

காவல் லாக் அப்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளியாகியுள்ளன: பாலகிருஷ்ணனின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கழுத்தின் இடது பக்கம் சாய்வான கயிறு தடமும், வலது பக்கம் 3 சிராய்ப்பு காயங்களும் இருந்தன. கழுத்தின் வலதுபுறத்தில் ஊசி குத்தியது போன்ற 3 அடையாளங்கள் இருந்ததாகவும், முதுகுப் பகுதியில் நீல நிற ரத்தக்கசிவு காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூளை மற்றும் இதயம் ஆகியவை வழக்கத்தை விட வீக்கத்துடன் காணப்பட்டதாகவும், நுரையீரலில் சிறிய ரத்தக்கசிவு மற்றும் இடது முழங்கால், கைகளில் சிராய்ப்பு காயங்கள் இருந்ததாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாலகிருஷ்ணனின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மதுரையில் தீவிர சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். இந்நிலையில், செக்கானூரணி காவல் நிலையத்தில் நிகழ்ந்த இந்த மரணத்தை 'காவல் நிலைய மரணம்' என்று குறிப்பிட்டுச் சிபிசிஐடி போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும், இந்த முதல் தகவல் அறிக்கையில் இப்போதைக்கு வேறு யாருடைய பெயர்களும் சேர்க்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.