மாரடைப்பால் துடித்த முதியவர் ... இலவச ஆம்புலன்ஸ் மூலம் காப்பாற்றிய பிளிங்கிட் !

 
ஹரியானா

ஹரியானா மாநிலத்தில், மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முதியவர் ஒருவரை, பிரபல வர்த்தக டெலிவரி நிறுவனமான பிளிங்கிட் தனது ஆன்லைன் இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலமாகச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி உயிர் காத்துள்ளது. பார்ப்போரின் நெஞ்சை நெகிழ வைக்கும் இந்தச் சம்பவம், பல்வேறு சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி இணையவாசிகள் இடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிரபல இன்ஸ்டாகிராம் பக்கப் பயனரான கோமல் கண்டேல்வால் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தங்களின் வீட்டில் வசிக்கும் முதியவருக்கு நள்ளிரவு நேரத்தில் திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களைத் தொடர்பு கொண்டு அழைத்த போது, நள்ளிரவு நேரத்தைப் பயன்படுத்தி 10,000 முதல் 15,000 ரூபாய் வரை மிக அதிகக் கட்டணம் கேட்டு அவர்கள் கொள்ளையடித்ததாகத் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில், பிளிங்கிட் நிறுவனத்தின் இலவச அவசர ஆம்புலன்ஸ் சேவை குறித்து அறிந்து உடனடியாக அலைபேசி செயலி வழியாகப் புக் செய்து பயன்படுத்தியதாக அவர் விவரித்துள்ளார். வணிக ரீதியாக அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்தாலும், இவ்வளவு மனிதாபிமானம் மிக்க ஒரு 5-ஸ்டார் ஆம்புலன்ஸை அவசர மருந்துகள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்களுடன் முற்றிலும் கட்டணமில்லாமல் அவர்கள் வழங்கியதை என்னால் மறக்க முடியாது என உருகியுள்ளார்.