“விசில் போடு...” இரண்டு தொகுதிகளிலும் விஜய் வேட்புமனு ஏற்பு - ஆனால் காத்திருக்கும் ‘பெயர்’ சிக்கல்!

 
விஜய் வேட்புமனு விஜய் வேட்புமனு

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்ற நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனுக்கள் ஒருவழியாக ஏற்கப்பட்டுள்ளன. பல கட்ட இழுபறி மற்றும் சந்தேகங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

விஜய் இந்தத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஒரு தொகுதியில் வயது 51 என்றும், மற்றொரு தொகுதியில் 52 என்றும் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையானது. அதேபோல, ஒரு மனுவில் குற்ற வழக்கைக் குறிப்பிடாமல் இருந்ததும் ஐயத்தை ஏற்படுத்தியது.

விஜய் வேட்புமனு

இந்தத் தவறுகளைச் சுதாரித்துக் கொண்ட விஜய் தரப்பு, உடனடியாகத் திருத்தப்பட்ட புதிய வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது. இன்று மதியம் நடந்த பரிசீலனையில், ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால் இரண்டு தொகுதிகளிலும் அவரது மனுக்கள் ஏற்கப்பட்டன.

திருச்சி கிழக்கு தொகுதியில் மனுக்கள் பரிசீலனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் மின்சாரம் வந்தவுடன் மீண்டும் பணிகள் தொடங்கி, விஜய்யின் மனு ஏற்கப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

மனுக்கள் ஏற்கப்பட்டாலும், பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு ஒரு புதிய சவால் காத்துள்ளது. விஜய்யைப் போன்றே விஜய் மற்றும் ஜோசப் என்ற பெயர்களைக் கொண்ட ஜி. விஜய், கே. விஜய், எஸ். ஜோசப், எம். ஜோசப் என 4 சுயேச்சை வேட்பாளர்கள் அங்கு களம் இறங்கியுள்ளனர்.

தவெக விஜய்

ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் இருப்பது, வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு பழைய அரசியல் வியூகமாகும். இதனை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுச் செய்திருப்பதாகத் தவெக தொண்டர்கள் கருதுகின்றனர். சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு, தனது உண்மையான சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் விஜய் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விஜய்யின் மனுக்கள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதிகளில் தவெக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.