நாளை வானில் தோன்றும் 'புளூ மைக்ரோ மூன்'... 27 வருடத்திற்கொரு முறைத் தோன்றும் - வெறும் கண்களால் பார்க்கலாம்.. மிஸ் பண்ணாதீங்க!
விண்வெளியில் நிகழும் பல்வேறு அதிசயங்களில், நிலவின் சுற்றுப்பாதையையும் நாட்காட்டியையும் அடிப்படையாகக் கொண்டு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்' நிகழ்வு மிகவும் தனித்துவமானது. ஒரே காலக்கட்டத்தில் இரண்டு வெவ்வேறான வானியல் நிகழ்வுகள் ஒன்றாக இணைவதே இதன் சிறப்பம்சமாகும்.
'புளூ மைக்ரோ மூன்' என்றால் என்ன?
பொதுவாக ஒரு ஆங்கில நாட்காட்டி மாதத்தில் ஒரு முழு நிலவு (பௌர்ணமி) மட்டுமே தோன்றும். ஆனால், நிலவின் சுழற்சி காலம் 29.5 நாட்களாக இருப்பதால், சில மாதங்களில் இரண்டு பௌர்ணமிகள் வருவதுண்டு. அவ்வாறு ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது பௌர்ணமி 'புளூ மூன்' என்று அழைக்கப்படுகிறது. நடப்பு மே மாதத்தில் ஏற்கனவே மே 1-2 தேதிகளில் ஒரு பௌர்ணமி தோன்றிய நிலையில், நாளை மே 31 அன்று இரண்டாவது பௌர்ணமி வருகிறது. (குறிப்பு: 'புளூ மூன்' என்பதால் நிலவு நீல நிறத்தில் காட்சியளிக்காது; இது வெறும் வானியல் பெயரிடல் மட்டுமே).
நிலவானது பூமியை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் பூமிக்கு மிக அருகில் வரும் புள்ளி 'பெரிஜி' (Perigee) என்றும், பூமியை விட்டு மிகத் தொலைவில் செல்லும் புள்ளி 'அபோஜி' என்றும் அழைக்கப்படுகிறது. நாளை தோன்றும் பௌர்ணமியின் போது, நிலவு பூமியிலிருந்து சுமார் 4,06,000 கிலோமீட்டர் தொலைவில் (அபோஜி புள்ளிக்கு அருகில்) இருக்கும். இதனால் இது 'மைக்ரோ மூன்' எனப்படுகிறது.

ஏன் இது மிக அரிய நிகழ்வு?
'புளூ மூன்' நிகழ்வு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 'மைக்ரோ மூன்' நிகழ்வு ஆண்டிற்குச் சில முறையும் தனித்தனியாக நடப்பது இயல்புதான். ஆனால், இவை இரண்டும் ஒரே நாளில் ஒன்றாக இணைவது மிக மிக அரிதானது. இந்த இரு நிகழ்வுகளின் அரிய சேர்க்கையானது 27 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் விந்தையாகும்.
பூமிக்கு மிகத் தொலைவில் நிலவு அமைவதால், வழக்கமான பௌர்ணமி நிலவை விட இது 14 சதவீதம் சிறியதாகவும், அதன் பிரகாசம் (ஒளி) சற்றே குறைவாகவும் இருக்கும். எனினும், வெறும் கண்களால் பார்க்கும்போது இந்த அளவி வித்தியாசம் பெரியதாகத் தெரியாது.

எப்போது, எப்படிப் பார்க்கலாம்?
இந்திய நேரப்படி நாளை மே 31ம் தேதி மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, கிழக்கிலிருந்து தென்கிழக்கு திசையில் இந்த அரிய புளூ மைக்ரோ மூன் தோன்றும். மாலை சந்திரன் உதயமாகும் சமயத்தில், பூமியின் வளிமண்டல விளைவு மற்றும் 'சந்திர மாயை' காரணமாக, இது வழக்கமான அளவை விடப் பெரிதாகவும், லேசான ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்திலும் காட்சியளிக்க வாய்ப்புள்ளது.
நாளை தோன்றும் இந்த விசித்திர நிலவுக்கு மிக அருகில், 'விருச்சிக' விண்மீன் கூட்டத்தின் மிக பிரகாசமான சிவப்புக் நட்சத்திரமான 'அண்டாரெஸ்' காட்சியளிக்கும் என்பதால் விண்வெளிப் பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த விருந்தாக அமையும்.
இதனைப் பார்ப்பதற்கு எவ்வித சிறப்புத் தொலைநோக்கிகளும் தேவையில்லை; தெளிவான வானிலை இருந்தால் வெறும் கண்களாலேயே அழகாகக் காணலாம். நாளை தவறவிட்டால், மீண்டும் இத்தகையதொரு 'புளூ மைக்ரோ மூன்' நிகழ்வைக் காண நாம் 2053 ஜூலை வரைக் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
