வியட்நாம் படகு விபத்தில் பலியான 10 பேரின் உடல்களும் இன்று தமிழகம் வருகை - தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்தது 'லாவா' படகு நிறுவனம்!

 
வியட்நாம்

வியட்நாமில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்களின் உடல்களும் தாயகம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், விபத்துக்குக் காரணமான 'லாவா' படகு நிறுவனம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு 15 இந்தியர்களின் உடல்களும் கொண்டு வரப்பட்டன. அங்கு உடல்களைப் பெற்றுக்கொண்டு, அவசியமான சட்ட நடைமுறைகளை முடித்து அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளைத் தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி சந்தோஷ் ஹதிமானி ஐ.ஏ.எஸ் நேரில் பார்வையிட்டுத் தீவிரப்படுத்தினார். அதிகாரியின் நேரடி மேற்பார்வையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரின் உடல்களும் இன்று தனித்தனி விமானங்கள் மூலம் தமிழகத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன.

வியட்நாம்

விபத்தில் பலியான மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த 6 நபர்களின் உடல்கள் இன்று மதியத்திற்குள் கோவை சர்வதேச விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன. எஞ்சிய 4 தமிழர்களின் உடல்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மாலைக்குள் கொண்டு வரப்பட உள்ளன. விமான நிலையங்களில் உடல்களைப் பெற்றுக்கொண்டு, அரசு மரியாதையுடன் அவர்களின் சொந்த ஊர்களுக்குத் கொண்டு சேர்க்கத் தேவையான அனைத்து ஆம்புலன்ஸ் மற்றும் வாகன வசதிகளையும் மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் வைத்துள்ளன.

பூ குவோக் தீவு அருகே அதிவேகச் சுற்றுலாப் படகை இயக்கிய உள்நாட்டு நிறுவனமான 'லாவா', இந்த விபத்திற்குப் பொறுப்பேற்றுள்ளது. விபத்தில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்த 15 சுற்றுலாப் பயணிகளின் குடும்பங்களுக்கும் தார்மீக அடிப்படையில், தலா ரூ.25 லட்சம் விபத்து இழப்பீடு மற்றும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ளது.

வியட்நாம் படகு

இந்தத் தொகை சர்வதேசக் காப்பீட்டு நடைமுறைகள் மற்றும் இந்தியத் தூதரகத்தின் வழிகாட்டுதலின்படி, உயிரிழந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.