அரசு மருத்துவமனையில் சடலங்களை மாற்றிக் கொடுத்ததால் பரபரப்பு... இறுதிச்சடங்கின் போது உறவினர்கள் அதிர்ச்சி!
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கவனக்குறைவு காரணமாக உடற்கூறாய்வு செய்யப்பட்ட இளம் பெண்ணின் சடலம் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிவடைந்த நிலையில், உயிரிழந்த இளம் பெண்ணின் சடலத்தை மருத்துவமனை ஊழியர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்கிற்கான நடைமுறைகளைத் தொடங்கும் போது, அது தங்கள் வீட்டுப் பெண்ணின் உடல் அல்ல என்பதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக சடலத்துடன் மீண்டும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு விரைந்த உறவினர்கள், ஊழியர்களின் அலட்சியப் போக்கைக் கண்டித்துக் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விசாரணையில் 18 வயது இளம்பெண்ணின் சடலத்திற்குப் பதிலாக 19 வயதுடைய வேறொரு பெண்ணின் சடலம் கவனக்குறைவாக மாற்றி வழங்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, உரியப் பரிசோதனைகளுக்குப் பிறகு 18 வயது பெண்ணின் சடலத்தை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஊழியர்கள் மீண்டும் சரியாக ஒப்படைத்தனர். அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த அலட்சியச் சம்பவம் குறித்துத் துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
