பிரபல பாலிவுட் நடிகர் முஷ்டாக் கான் காலமானார் - பிரபலங்கள் இரங்கல்!

 
முஷ்டாக் கான்

இந்தித் திரையுலகில் தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் சிறந்த துணைக் கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பிரபல மூத்த நடிகர் முஷ்டாக் கான், புற்றுநோய் பாதிப்பு காரணமாகக் காலமானார்.

கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முஷ்டாக் கான், மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில்தான் அவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை அவர் காலமானார். இவரது மறைவை அவரது மகன் மொஹ்சின் உறுதிப்படுத்தியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு வரை, பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பாதுகாவலர் ஷேராவின் மகன் அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் அவர் மிகவும் ஆரோக்கியமாகவே கலந்து கொண்டு நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முஷ்டாக் கான்

கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான 'ஆல்பர்ட் பிண்டோ கோ குஸ்ஸா க்யோன் ஆதா ஹை' படத்தின் மூலம் நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கிய முஷ்டாக் கான், 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் முன்னணி துணை நடிகராக வலம் வந்தார்.

'ஆஷிகி', 'ஹம் ஹைன் ரஹி பியார் கே', 'ஹேரா பேரி', 'காடார்', 'வெல்கம்', 'வாண்டட்', 'ஓ மை காட்', 'ஸ்த்ரீ' மற்றும் 'ஸ்த்ரீ 2' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக 2007-ல் வெளியான 'வெல்கம்' படத்தில் இவரது நகைச்சுவைக் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

முஷ்டாக் கானின் மறைவுக்கு மேற்கு இந்தியத் திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.என். திவாரி மற்றும் இயக்குநர் அசோக் பண்டிட் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச்சடங்குகள் வெள்ளிக்கிழமை அன்று மும்பை யாரீ ரோடு கபரிஸ்தானில் நடைபெறவுள்ளது.