பஸ்ஸில் குண்டுவெடித்து 5 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி; 20 பேர் படுகாயம் - கொலம்பியாவில் பயங்கரம்!
கொலம்பியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கவுக்கா மாகாணத்தில், பயணிகள் பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவின் பான் அமெரிக்கன் நெடுஞ்சாலையில், காஜிபியோ நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது, சாலையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதலில் பேருந்து உருக்குலைந்ததுடன், சாலையில் பெரிய பள்ளமும் ஏற்பட்டது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 38-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அந்தப் பகுதியின் பழங்குடியின மக்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால், அரசுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்காத முன்னாள் 'பார்க்' கிளர்ச்சியாளர் குழுவான ஜெய்மே மார்டினஸ் பிரிவு மற்றும் அதன் தலைவன் இவான் மோர்டிஸ்கோ இருப்பதை ராணுவத் தளபதி ஜெனரல் ஹ்யூகோ லோபஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இவர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் குழுவினராகக் கருதப்படுகின்றனர்.

இந்தத் தாக்குதலை "பயங்கரவாத மற்றும் பாசிசச் செயல்" எனக் கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ கடுமையாகச் சாடியுள்ளார். குற்றவாளிகளைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தவும், அந்தப் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த மாதம் கொலம்பியாவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் அந்த நாட்டில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அந்தப் பகுதியில் சுமார் 26 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
