நடுவானில் பறந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்... அவசர அவசரமாக தரையிறக்கம்!

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் ஜூன் 12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறியது. அதன் பிறகு விமானங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே பறக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கேரளத்தின் கொச்சி விமான நிலையத்துக்கு மஸ்கட்டிலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று வந்துள்ளது. பின்னர், 157 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அந்த விமானம் இன்று ஜூன் 17ம் தேதி காலை தலைநகர் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்துக்கு எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்பட்டு, நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உடனடியாக, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் தற்போது சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சோதனைகள் அனைத்தும் முடிவடைந்தவுடன், விமானம் மீண்டும் டெல்லி புறப்படும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக ஜூன் 15ம் தேதியன்று, ஜெர்மனியிலிருந்து ஹைதரபாத் வந்த லுஃப்தான்ஸா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அந்த விமானம் மீண்டும் ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.