பேருந்தில் வெடிகுண்டுத் தாக்குதல்... 7 பேர் பலி; 20 பேர் படுகாயம்!
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள காக்கா மாகாணத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில், நேற்று சனிக்கிழமை ஒரு பேருந்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கோர சம்பவத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் காஜிபியோ என்ற இடத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் மீது இந்த வெடிகுண்டு வீசப்பட்டதாகத் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிப்பின் வீரியத்தால் பேருந்து உருக்குலைந்ததுடன், சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு அந்தப் பிராந்தியத்தில் செயல்படும் கிளர்ச்சிக் குழுக்களே காரணம் என்று கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் செயலை "பயங்கரவாதத் தாக்குதல்" என்று கண்டனம் தெரிவித்துள்ள அவர், குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர ராணுவ நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அடுத்த மாதம் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
