முன்னாள் காதலியை கொல்லச் சூழ்ச்சி... கார் குண்டு வெடிப்பில் இளைஞர் பலி!
கர்நாடக மாநிலம் துமகூருவில் முன்னாள் காதலியைத் திட்டமிட்டுக் கொலை செய்ய முயன்ற வாலிபர் ஒருவர், தான் தயாரித்த சூழ்ச்சி வலையிலேயே சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவில் வசித்து வந்த நாகேந்திரா (30) என்ற இளைஞரும், ரம்யா உல்லாஸ் (23) என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். அண்மைக்காலமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர்கள் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகேந்திரா, நேற்று அந்தப் பெண் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று அவரை வலுக்கட்டாயமாகத் தனது காரில் கடத்திச் சென்றுள்ளார்.
Karnataka man killed after setting off bomb in car to die with ex-girlfriend; woman escapes#Karnataka #blast https://t.co/LVYvN0FbAy
— IndiaTV English (@indiatv) June 28, 2026
மகளைக் காணாததால் ரம்யாவின் பெற்றோர் ஜெயநகர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையே கடத்தப்பட்ட காரில் ரம்யாவைக் கொலை செய்துவிடுவேன் என நாகேந்திரா தொடர்ந்து மிரட்டியுள்ளார். மேலும் காரில் வெடிகுண்டு ஒன்றையும் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி அச்சுறுத்தியுள்ளார். ஜோகிஹள்ளி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால், நாகேந்திரா அந்தப் பெண்ணைக் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காரின் ஓட்டுநர் வாகனத்தை உடனடியாக நிறுத்தியுள்ளார்.

அந்தச் சமயம் பார்த்து ரம்யா காரில் இருந்து கீழே குதித்துத் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார். அவர் குதித்த சில நிமிடங்களிலேயே காரில் இருந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் சிக்கி நாகேந்திரா சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஓட்டுநர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துக் கல்லம்பெல்லா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
