ஈரான் எண்ணெய் கிடங்கு மீது குண்டுவீச்சு.. 1.95 கோடி லிட்டர் எரிவாயு தீப்பற்றி எரிகிறது - 'பிளாக் அலர்ட்' விடுக்கப்பட்டதால் பரபரப்பு!

 
ஈரான் எண்ணெய் கிடங்கு தீ ஈரான் எண்ணெய் கிடங்கு தீ

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் தாக்குதல் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் போர் பதற்றம் பரவியுள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள ஷார்-இ-ரே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலால் அங்கிருந்த எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் வெடித்துச் சிதறின. சுமார் 1.95 கோடி லிட்டர் எரிவாயு தீப்பற்றி எரிந்து வருவதால், வானுயரத்திற்கு நெருப்புப் பிழம்புகளும் கரும் புகையும் எழும்பி வருகின்றன.

நச்சுப் புகை டெஹ்ரான் மாநகர் முழுவதையும் சூழ்ந்துள்ளதால், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு 'பிளாக் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான தாக்குதல்களில் இதுவரை 1,300 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.

கமேனியின் மறைவுக்குப் பிறகு, ஈரான் படைகள் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியன் அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய போதிலும், ஈரானின் ராணுவ அமைப்புகள் தொடர்ந்து அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருவது சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.

ஈரான் எண்ணெய் கிடங்கு தீ

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் தாக்குதல் ஈரானின் பொருளாதாரத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த கூட்டுத் தாக்குதல், ஈரானின் அணுசக்தி நிலையங்களை நோக்கியும் நகர வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மத்திய கிழக்கின் இந்த அசாதாரண சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.