ஐ.நா. அமைதிப்படை மீது குண்டுவீச்சுத் தாக்குதல் - லெபனானில் பரபரப்பு!

 
ஐநா ஐநா

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படை எனப்படும் அமைதிப்படையினர் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில், செர்பிய நாட்டைச் சேர்ந்த அமைதிப்படை வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

லெபனான் நாட்டின் கிழக்கு மண்டலப் பகுதியில் ஐ.நா. சபையின் உத்தரவின் கீழ் அமைதிப்படை வீரர்கள் தங்களின் வழக்கமான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.

இந்தத் திடீர் குண்டுவீச்சுத் தாக்குதலின் போது, ஐ.நா. படையில் பணியாற்றி வந்த செர்பியா நாட்டைச் சேர்ந்த சார்ஜென்ட் மிலோவன் ஜோவனோவிக் என்பவர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே வீர மரணமடைந்தார். மேலும், இந்த பயங்கரத் தாக்குதலில் சிக்கி ஸ்பெயின் மற்றும் எல் சால்வடர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு அமைதிப்படை வீரர்கள் மிகக் கடுமையான காயமடைந்தனர். அவர்கள் தற்பொழுது மீட்கப்பட்டு, அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளின் எல்லையைக் காக்கும் அமைதிப்படை வீரர்களே இலக்கு வைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளதற்கு ஐக்கிய நாடுகள் சபை தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

"ஐ.நா. சபையின் உலகளாவிய ஆணைகள் மற்றும் விதிகளின் கீழ், போர்ப் பகுதிகளில் பொதுமக்களைப் பாதுகாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டு வரும் அமைதிப்படை வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது உலக நாடுகளின் கடமையாகும். இந்த அத்துமீறலைத் தடுக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஐ.நா. தலைமை தற்பொழுது வலியுறுத்தியுள்ளது.