பத்திரம் மக்களே... நாளை தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு... சென்னையில் அக்.25-ல் கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் நிலவி வரும் வானிலை மாற்றங்கள் மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடையக்கூடும் எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் நாளை அக்டோபர் 22ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தென் தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்தால் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னையில் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அடுத்த மூன்று நாட்களுக்குத் நகரில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 23-ம் தேதி உருவாகக் கூடிய புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர். துரை தகவல் தெரிவித்துள்ளார்.

வானிலை நிலவரம் மற்றும் கடல் சீற்றம் காரணமாக, அடுத்த ஓரிரு நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வரவிருக்கும் நவம்பர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட அதிகளவில் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
