இரண்டு சிறுமிகளும் பாம்பு கடித்ததினாலேயே மரணம்... பிரேத பரிசோதனையில் உறுதி செய்த மருத்துவர்கள்!

 
பாம்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூக்கனூர் கிராமத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் அவர்கள் பாம்பு கடித்ததாலேயே உயிரிழந்தது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூக்கனூர் கிராமத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தேவதர்ஷினி மற்றும் தேவஜனனி ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் நேற்று காலை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

பாம்பு

குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, முதற்கட்டமாக அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகளின் உடலில் பாம்பு கடித்ததற்கான வெளிப்படையான தடயங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்திருந்தனர். இதனால் குழந்தைகளின் உயிரிழப்புக்கான சரியான காரணம் குறித்துப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியக் குழந்தைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கையில், தேவதர்ஷினி மற்றும் தேவஜனனி ஆகிய இரு குழந்தைகளும் விஷப்பாம்பு கடித்ததாலேயே உயிரிழந்தது மருத்துவர்களால் திட்டவட்டமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டுவிரியன் பாம்பு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பச்சைக் குழந்தைகள் பாம்பு கடித்துப் பலியான இந்தச் சம்பவம் மூக்கனூர் கிராம மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.