லியோனி பிரச்சார வாகனம் மீது பாட்டில் வீச்சு - மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது பரபரப்பு!
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று இரவு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியில் திரண்டிருந்த மக்களிடையே, தி.மு.க. அரசு பெண்களுக்கு வழங்கி வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் சிறப்புகள் குறித்து அவர் விறுவிறுப்பாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த கூட்டத்திற்குள் இருந்து மர்ம நபர் ஒருவர், திடீரென லியோனியை நோக்கி மதுபாட்டிலை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மர்ம நபர் வீசிய அந்தப் பாட்டில், திண்டுக்கல் லியோனி நின்று பேசிக்கொண்டிருந்த பிரசார வாகனத்தின் முன்பகுதியில் பட்டு சுக்குநூறாகச் சிதறியது. பாட்டில் வீசப்பட்ட திசையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிதறி ஓடினர். எனினும், அந்தப் பாட்டில் வாகனத்தின் மீது பட்டதால், மேடையில் இருந்த லியோனி எவ்விதக் காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பிரசாரம் தடைபட்டதுடன், தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
பாட்டில் வீசிவிட்டு கூட்டத்திற்குள் மறைந்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து தி.மு.க.வினர் தீவிரமாகத் தேடினர். ஆனால், இருளைப் பயன்படுத்திக் கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதால் அவரை அடையாளம் காண முடியவில்லை. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பாலக்கரை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் முக்கியப் பேச்சாளர் ஒருவரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
