பாட்டிலில் பெட்ரோல் தர தடை... பைக் பெட்ரோல் டேங்கையே எடுத்துச் சென்ற இளைஞர்!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தி கடந்த சில நாட்களாகப் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் அலைமோதி வருகின்றனர்.
பெட்ரோல் பங்குகளில் பாட்டில்கள், கேன்கள் அல்லது பிளாஸ்டிக் ஜாடிகளில் பெட்ரோல் நிரப்ப மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் பாதுகாப்பு கருதித் தடை விதித்துள்ளன. வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெட்ரோல் வாங்கச் சென்றபோது, பாட்டிலில் பெட்ரோல் தர ஊழியர்கள் மறுத்து விட்டனர்.

உடனே அந்த இளைஞர், தனது பைக்கில் இருந்த பெட்ரோல் டேங்கை மட்டும் தனியாகக் கழட்டி எடுத்துக்கொண்டு பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார். "விதிமுறைப்படி வண்டியின் டேங்கில் தானே பெட்ரோல் நிரப்ப வேண்டும்? இதோ டேங்க்.. இதில் நிரப்புங்கள்" என அவர் கூறியதைக் கண்டு அங்கிருந்தவர்கள் வியப்படைந்தனர்.
இந்தச் செயலை யாரோ வீடியோ எடுத்துப் பகிர, "இந்தியா ஆரம்பக்கால வீரர்களுக்கானது அல்ல (India is not for beginners)" என்ற வாசகத்துடன் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவும் செய்திகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்தியாவில் அடுத்த 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வதந்திகளைப் பரப்பிச் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாட்டில்களில் பெட்ரோல் வாங்குவது தீ விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், மக்கள் முறையாகத் தங்கள் வாகனங்களிலேயே நேரடியாக பெட்ரோல் நிரப்பிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
