இந்திய குத்துச்சண்டை சம்மேளன பொதுச்செயலாளர் பிரமோத் குமார் இடைநீக்கம்!
இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தில் ஏற்பட்டுள்ள கடும் மோதல்களுக்கு மத்தியில், அதன் பொதுச்செயலாளர் பிரமோத் குமார் மீது சுமத்தப்பட்டுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் அதிகார வரம்பு மீறல் புகார்களைத் தொடர்ந்து, அவரை உடனடியாக இடைநீக்கம் செய்து சம்மேளனத்தின் தலைவர் அஜய் சிங் உத்தரவிட்டுள்ளார்.
முறையான அனுமதியின்றி மற்றும் நிதிக்குழுவின் ஒப்புதலைப் பெறாமல் உலகக் கோப்பை குத்துச்சண்டை தொடருக்கான ஒளிபரப்பு உரிமப் பணி ஆணையை வழங்கியதில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட தேசிய குத்துச்சண்டை போட்டிகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளுக்குப் பொதுச்செயலாளர் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், விசாரணைக்குழுவின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தவறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மேளனத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது மற்றும் நிர்வாக விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டது போன்ற புகார்களின் அடிப்படையில் இந்த இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் இடையே நிலவி வரும் இந்த அதிகாரப் போட்டியும் பரஸ்பர இடைநீக்க நடவடிக்கைகளும் இந்திய குத்துச்சண்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
