பாம்பு கடித்து சிறுவன் பலி... தூங்கிக் கொண்டிருந்த போது பெரும் சோகம்!
கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கோடாலி பகுதியில், நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் கட்டுவிரியன் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தான். சில்ஜோ - ஜோண்ஷி தம்பதியின் மகன்களான அனோத் (10) மற்றும் ஆல்ஜோ (8) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு தங்கள் அறையில் தூங்கச் சென்றுள்ளனர். நள்ளிரவில் தங்களை ஏதோ கடித்துவிட்டதாகவும், உடல் வலி மற்றும் வாந்தி வருவதாகவும் சிறுவர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். ஆனால், ஏதோ பூச்சி கடித்திருக்கும் அல்லது அஜீரணக் கோளாறாக இருக்கும் என்று நினைத்த பெற்றோர்கள், காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி அவர்களை மீண்டும் தூங்க வைத்துள்ளனர்.

மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் ஆல்ஜோ எழாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், அவனை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் பதறிப்போன பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுவர்கள் படுத்திருந்த அறையைச் சோதனை செய்தபோது, ஆல்ஜோவின் தலையணைக்கு அடியிலேயே 2 அடி நீளம் கொண்ட கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு சுருண்டு படுத்திருப்பதைக் கண்டு உறைந்து போயினர். அதே பாம்பின் கடியால் பாதிக்கப்பட்ட மூத்த மகன் அனோத் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

வெப்பத்தின் கொடுமை தாளாமல் குளிர்ச்சியைத் தேடி வீட்டிற்குள் புகுந்த பாம்பு, மெத்தையில் இருந்த தலையணைக்கு அடியில் மறைந்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் வலியால் துடித்தபோதே கவனித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் ஆல்ஜோவை காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் வேதனை தெரிவித்தனர். தற்போது இச்சம்பவம் குறித்து திருச்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரின் சிறிய அலட்சியம் ஒரு பிஞ்சு உயிரைப் பறித்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
