வீட்டை விட்டு ஓடிய சிறுவன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைப்பு... வாக்காளர் சரிபார்ப்பால் நெகிழ்ச்சி !

 
நெகிழ்ச்சி

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் எம்மிக்கனூரு பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற அச்சத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினான். மகனைக் காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்காததால் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். வெளியேறிய அந்த இளைஞன் வேறொரு பகுதியில் தங்கித் தனது வாழ்க்கையைத் தொடங்கி வசித்து வந்த போதிலும், தனது சொந்த ஊரையும் குடும்பத்தையும் பிரிந்த ஏக்கம் அவனுள் தொடர்ந்து இருந்து வந்தது. காலங்கள் பல கடந்த போதிலும் பெற்ற தாயையும் பிறந்த மண்ணையும் பிரிந்த சோகம் அவரைத் தொடர்ந்து வாட்டி வதைத்து வந்தது.

இந்நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை மற்றும் விவரங்களைச் சரிபார்க்கும் சிறப்பு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி புதிய பகுதியில் வாக்காளராகப் பதிவு செய்யப் பெற்றோரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. இதன் காரணமாகத் தனது பூர்வீக ஊரான எம்மிக்கனூருக்கு அந்த நபர் வேறு வழியின்றி 30 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் வருகை தர வேண்டிய சூழல் உருவானது. அதிகாரப்பூர்வ வாக்காளர் படிவத்தைச் சமர்ப்பித்துச் சரி பார்த்தபோது, நீண்ட நாட்களாக மகனுக்காக ஏங்கிக் கொண்டிருந்த தாயையும் குடும்பத்தினரையும் அவர் நேரில் சந்தித்தார்.

Runaway Kurnool Boy Returns Home to Emotional Reunion After 30 Years

இத்தனை ஆண்டுகள் கழித்துக் காணாமல் போன மகன் உயிருடன் திரும்பி வந்ததைக் கண்ட தாய் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அவரைத் தழுவிக் கொண்டனர். தேர்வு பயத்தால் வீட்டை விட்டு ஓடிய சிறுவன், 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெற்ற தாயின் மடியில் தஞ்சமடைந்த காட்சி அப்பகுதி மக்களை நெகிழ வைத்தது. ஒரு சாதாரண வாக்காளர் சரிபார்ப்புப் படிவம், 30 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த ஒரு குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்த்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த அதிகாரப்பூர்வ ஆவணச் சரிபார்ப்பு நடவடிக்கை ஒரு குடும்பத்தின் நீண்டகாலப் பிரிவுக்குச் சுகமான முடிவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.