கர்ப்பமானதால் கைவிட்ட காதலன்... பச்சிளம் குழந்தையைக் கொன்று தென்னந்தோப்பில் வீசிய நர்ஸ்!

 
குழந்தை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், திருமணத்திற்கு மீறிய உறவில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையைக் கொன்று தென்னந்தோப்பில் வீசிய நர்ஸின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே உள்ள முதியோர் இல்லம் மற்றும் மருத்துவமனை வளாகத் தென்னந்தோப்பில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில் பிணமாகக் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர் வடசேரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர்.

குழந்தை வாயில் டேப்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். வாலிபர் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் அந்த நர்ஸ் கர்ப்பமானார். நர்ஸ் கர்ப்பமானதை அறிந்ததும் அந்த வாலிபர் பழக்கத்தைத் துண்டித்துக் கொண்டு தலைமறைவானார். அவமானத்திற்குப் பயந்து கர்ப்பமாக இருக்கும் விவரத்தை நர்ஸ் யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.

குழந்தை பிரசவம்

சம்பவத்தன்று அவருக்குக் குழந்தை பிறந்த நிலையில், திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றது வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதி, பிறந்த சில நிமிடங்களிலேயே குழந்தையைக் கொன்று தென்னந்தோப்பில் வீசியுள்ளார். சந்தேகத்தின் பேரில் நர்ஸைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது உண்மை அம்பலமானது. பிரசவத்திற்குப் பிந்தைய உடல்நலக் குறைவு காரணமாக அந்த நர்ஸ் தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.