11ம் வகுப்பு மாணவியை கொன்றுவிட்டு விஷம் குடித்த காதலன்... மருத்துவமனையில் பரபரப்பு வாக்குமூலம்!
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சோலைப்புதூர் கிராமத்தில், செல்போனில் அதிக நேரம் பேசியதால் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகப் பிளஸ்-1 மாணவியைக் கத்தியால் குத்தியும், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்த உறவினரான காதலன், தானும் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இளைஞரைக் கைது செய்த காவல்துறையினர், மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சாயர்புரம் அருகே உள்ள சோலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுடலைமணி மகள் அபர்ணா (17), செபத்தையாபுரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவரும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் உறவினரான காசிபாண்டியன் மகன் முத்துராஜ் (23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், அபர்ணாவின் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அபர்ணாவின் வீட்டிற்குச் சென்ற முத்துராஜுக்கும், அபர்ணாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்துராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபர்ணாவைச் சரமாரியாகக் குத்தியதுடன், அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அபர்ணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்த பின்னர் அங்கிருந்து தப்பியோடிய முத்துராஜ், பேருந்து நிறுத்தத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சாயர்புரம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஆதாம் அலி தலைமையிலான காவல்துறையினர், அபர்ணாவின் உடலைக் கைப்பற்றித் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த முத்துராஜை மீட்டு அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.

காவல்துறையினரிடம் முத்துராஜ் அளித்த வாக்குமூலத்தில், “அபர்ணா சமீப காலமாக அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசி வந்ததால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கண்டித்தும் அவர் கேட்கவில்லை. சம்பவத்தன்று காலையில் அவர் வீட்டு வாசலில் நின்றபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை கேட்டபோது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் கத்தியால் குத்தி, துப்பட்டாவால் கழுத்தை இறுக்கினேன். பின்னர் அவள் இல்லாத உலகில் வாழ விரும்பாமல் விஷம் குடித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், அபர்ணாவின் உடல் நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை சொந்த ஊரான முள்ளக்காடு பகுதிக்குக் கொண்டு சென்று உறவினர்கள் கண்ணீருடன் இறுதி சடங்கு செய்தனர். கொலை வழக்குப்பதிவு செய்து முத்துராஜைக் கைது செய்துள்ள சாயர்புரம் காவல்துறையினர், மருத்துவமனையில் அவருக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
