வரதட்சணையாகத் தங்க பிரேஸ்லெட் கேட்ட கணவர்... மன உளைச்சலில் மனைவி தூக்கிட்டு தற்கொலை!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான ரஞ்சிதா. இவருக்கும் 36 வயதான கந்தசாமி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது உரிய சீர்வரிசைகள் செய்யப்பட்ட போதிலும் கணவர் தொடர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தி வந்தார். தனக்கு வரதட்சணையாக ஒரு தங்க பிரேஸ்லெட் வாங்கித் தருமாறு ரஞ்சிதாவை கணவர் கறாராக வற்புறுத்தியுள்ளார். கணவரின் தொடர் வற்புறுத்தலால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ரஞ்சிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

ரஞ்சிதாவின் மரணச் செய்தியைக் கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்தில் திரண்டனர். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் தாராபுரம் பகுதியில் திடீரெனச் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிய அவர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தாராபுரம் காவல்துறையினர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானம் செய்தனர்.

பின்னர் ரஞ்சிதாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.இந்த சோகமான மரணம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கணவர் கந்தசாமியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
