மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பால் ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி பரிதாப பலி!
கேரளா மாநிலத்தில் அபூர்வ வகை நோயான மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்குள்ள மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஆட்டோ ஓட்டுநர் கடும் தலைவலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து அவர் சிகிச்சைக்காகக் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட தீவிர மருத்துவப் பரிசோதனையில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தேங்கி நிற்கும் அசுத்தமான தண்ணீரில் குளிக்கும் போதோ அல்லது முகம் கழுவும் போதோ மூக்கு வழியாக இந்த அமீபா நுழைகிறது. மூளைப் பகுதியை நேரடியாகத் தாக்கி உயிரைக் குடிக்கும் இந்த ஆபத்தான கிருமி பாதிப்பு கேரளா மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கேரளாவில் இதே அரிதான தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ ஓட்டுநரின் மறைவைத் தொடர்ந்து அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் தேங்கி நிற்கும் அசுத்தமான குளம் மற்றும் குட்டைகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் மற்றும் தீவிர தலைவலி அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகிச் சிகிச்சை பெற வேண்டும் எனக் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
