AI காதலியைச் சந்திக்க சொத்துகளை விற்று 1,900 கி.மீ. பயணம்! பிரேசில் நபருக்கு அதிர்ச்சி

 
ஏஐ

 


பிரேசிலைச் சேர்ந்த 49 வயது கட்டுமானத் தொழிலாளி எடிமர் மார்டின்ஸ், சமூக வலைதளத்தில் காதலித்ததாக நம்பிய பெண்ணை நேரில் சந்திக்கத் தனது உடைமைகள் அனைத்தையும் விற்று சுமார் 1,900 கி.மீ. பயணம் செய்துள்ளார். ஆனால், அவர் தேடிச் சென்ற பெண் உண்மையான நபர் அல்ல; செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரம் என்பது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்தார். 

 

பிரேசிலின் மரான்யாவ் மாநிலத்தில் வசிக்கும் எடிமர் மார்டின்ஸ், 2020-ம் ஆண்டு முதல் ‘ஜெசிகா ஒலிவேரா’ என்ற பெயரில் சமூக வலைதளத்தில் வெளியான பெண்ணின் வீடியோக்களைப் பார்த்து வந்துள்ளார். அந்தப் பெண் பண்ணை வீட்டில் வசிப்பதாகவும், தன்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளும் துணையைத் தேடுவதாகவும் வீடியோக்களில் கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய மார்டின்ஸ், அவரைத் திருமணம் செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம் என எதிர்பார்த்துள்ளார்.

கடந்த அக்டோபர் 9-ம் தேதி தனது உடைமைகளை விற்று, பெலோ ஹொரிசோன்டே நகருக்குப் பேருந்தில் பயணம் செய்தார். அக்டோபர் 11-ம் தேதி அங்கு சென்றபோது, தான் தேடி வந்த பெண் உண்மையில் இல்லை என்பது தெரியவந்தது. 

 

‘ஜெசிகா ஃபசெண்டெய்ரா’ என்ற பெயரில் இயங்கிய அந்தக் கணக்கில் 3 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்தப் பெண் AI மூலம் உருவாக்கப்பட்டவர் என்பதை கணக்கை நிர்வகித்தவர் ஒப்புக்கொண்டார். மார்டின்ஸுடன் தனிப்பட்ட முறையில் பேசியதில்லை என்றும், சமூக வலைதளத்தில் பார்வைகளையும் வணிக வாய்ப்புகளையும் அதிகரிப்பதே கணக்கின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்ததாகச் செய்திகள் கூறுகின்றன. 

 

பயணத்துக்காகப் பணத்தைச் செலவழித்ததால் ஊர் திரும்ப முடியாமல் தவித்த மார்டின்ஸுக்கு பெலோ ஹொரிசோன்டே நகர நிர்வாகத்தினர் உதவி செய்தனர். இணையத்தில் பார்க்கும் நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் நம்புவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தச் சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.