ஏஐ காதலியைத் தேடி 1,900 கி.மீ. பயணம்! சொத்துகளை விற்ற பிரேசில் நபருக்கு அதிர்ச்சி
பிரேசில் நாட்டைச் சேர்ந்த 49 வயது கட்டுமானத் தொழிலாளி ஒருவர், சமூக வலைதளத்தில் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் ஆசையில் தனது உடைமைகளை விற்று சுமார் 1,900 கி.மீ. பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தேடிச் சென்ற பெண், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரம் என்பது பின்னர் தெரியவந்தது.
மாரன்ஹாவோ பகுதியைச் சேர்ந்த எடிமார் மார்ட்டின்ஸ், சமூக வலைதளத்தில் ‘ஜெசிகா ஒலிவேரியா’ என்ற பெயரில் வெளியான பதிவுகளைப் பார்த்து அந்தப் பெண்ணை உண்மையானவர் என நம்பியுள்ளார். அவருடன் வாழலாம் என்ற நம்பிக்கையில் தனது உடைமைகளை விற்று, பேருந்தில் மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தின் பெலோ ஹொரிசோண்டே நகருக்குச் சென்றார்.
அங்கு அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளூர் வானொலி நிலையத்தின் உதவியை நாடியபோதுதான் உண்மை தெரியவந்தது. பணமின்றித் தவித்த அவருக்கு உள்ளூர் அதிகாரிகளும் சமூகப் பணியாளர்களும் உணவு, தங்குமிட வசதி மற்றும் ஊர் திரும்புவதற்கான பயணச்சீட்டு உள்ளிட்ட உதவிகளை வழங்கினர்.
