6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்... முதல்வர் விஜய் அதிரடி!
தமிழகத்தில் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி முதல், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முழுமையாக விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். முதல்வர் விஜய் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறையின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆகியவற்றின் மூலம் குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோரது நலனிற்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் இல்லங்கள், சமூக சட்டங்கள் மற்றும் சத்துணவு மையங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் 'வெற்றித் தமிழகம்' தொலைநோக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள துறை சார்பாகச் செயல்படுத்தக்கூடிய பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் அதற்குத் தேவைப்படும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் மிக விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகள், தத்தெடுக்கும் மையங்கள், மகளிர் மற்றும் மூத்த குடிமக்களுக்காகச் செயல்படுத்தப்படும் உதவி எண்கள் குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனுடன் குழந்தைகளுக்கான காலை மற்றும் மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி மையச் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் தரப்பில் முதல்வரிடம் எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 6 முதல் 8-ம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசு எடுத்துள்ள இந்த புதிய முடிவு ஒட்டுமொத்த பெற்றோர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
