#BREAKING: கன்னியாகுமரியில் விஜய்காக காத்திருந்த 2 பேர் மயக்கம்.. ஆம்புலன்ஸில் தீவிர சிகிச்சை!
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் இன்று கன்னியாகுமரியில் மேற்கொண்ட தேர்தல் பிரசார ரோடு ஷோவின் போது, கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக இரண்டு பேர் மயக்கமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளருக்கு ஆதரவாகத் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 12) பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தினார். தங்களது அபிமானத் தலைவரை ஒருமுறை நேரில் பார்த்துவிட மாட்டோமா என ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் காலை முதலே சாலை நெடுகிலும் குவிந்திருந்தனர்.

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் சாலையிலேயே காத்திருந்ததால் அந்தப் பகுதியே மக்கள் கடலாகக் காட்சியளித்தது. இன்று கன்னியாகுமரியில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், திறந்தவெளியில் நீண்ட நேரம் நின்றிருந்ததால் கூட்டத்தில் இருந்த இரண்டு பேர் திடீரென மயங்கி விழுந்தனர்.
அவர்கள் மயக்கமடைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக தொண்டர்கள், உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் அவர்களை மீட்டனர். சம்பவ இடத்திலேயே தயாராக இருந்த ஆம்புலன்ஸிற்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெயிலின் கொடுமையால் ஏற்பட்ட நீர்ச்சத்துக் குறைபாடே (Dehydration) அவர்கள் மயக்கமடையக் காரணம் எனத் தெரிகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கூட்டத்தில் இருப்பவர்களுக்குத் தண்ணீர் மற்றும் மோர் வழங்க நிர்வாகிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். மக்கள் அதிக அளவில் கூடுவதால் கூடுதல் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
