44 ஆண்டுகால உலக சாதனை முறியடிப்பு.. அமெலியா கெர் அதிரடி!
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அமெலியா கெர், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, 44 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துப் புதிய வரலாறு படைத்துள்ளார்.
நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே மகளிர் அணிக்கும், நியூசிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று துனெடின் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அபாரமாகப் பந்துவீசிய அமெலியா கெர், வெறும் 34 ரன்கள் மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதற்கு முன்பு, 1982-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்தின் ஜாக்கி லார்டு 10 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்ததே நியூசிலாந்து வீராங்கனையின் சிறந்த ஒருநாள் போட்டி பந்துவீச்சாக இருந்தது. 44 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்தச் சாதனையை அமெலியா கெர் இன்று தகர்த்துள்ளார். சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 7-வது வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, அமெலியா கெர்ரின் சுழற்பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வெறும் 102 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 103 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கிலும் ஜொலித்த அமெலியா கெர் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.
