#BREAKING: 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு... வெயிலையும் பொருட்படுத்தாமல் குவியும் வாக்காளர்கள்!
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே 56.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
காலை 9 மணி நிலவரம்: 17.69%, காலை 11 மணி நிலவரம்: 37.56%, பிற்பகல் 1 மணி நிலவரம்: 56.81% வாக்குப்பதிவு. குறிப்பாகத் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் வாக்குப்பதிவு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தலைநகர் சென்னையில் காலை நிலவிய மந்தநிலை மாறி, நண்பகலுக்குப் பின் வாக்குப்பதிவு வேகம் எடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவு நேரத்தை மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாங்குநேரி பெரும்பத்து, புதுக்கோட்டை வேங்கைவயல் மற்றும் விழுப்புரம் வானூர் ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் நீதி கோரி மக்கள் தொடர்ந்து தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். வாணியம்பாடி மற்றும் கொடைக்கானலில் திமுக, அதிமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே ஏற்பட்ட சிறு மோதல்கள் போலீசாரால் கட்டுப்படுத்தப்பட்டன.

மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த முறை தமிழகத்தில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தல்களை விட (72.81% - 2021) அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
